Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மயிலாடும்பாறை அருகே வனஉரிமை சட்டப்படி அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்குங்கள்; அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை..!

வருசநாடு, நவ. 3: மயிலாடும்பாறைஅருகே மலைக்கிராமங்களில் வசிக்கும் தங்கள் வீடுகளுக்கு, 2006ம் ஆண்டு வன உரிமைச்சட்டப்படி பட்டா வழங்க ேவண்டும் என்று பொதுமக்கள் தமிழக அரசுக்கு ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிபட்டி தாலுகாவில் மேகமலை, தும்மக்குண்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட 108 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி புலிகள் காப்பமாக இருப்பதால், அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, இதனால் வனப்பகுதியில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி, அவர்களை வெளியேற்றும் பணிகளை வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதனை எதிர்த்து இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முற்றுகை, உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பல தலைமுறைகளாக வசிக்கும் பகுதியில் இருந்து தங்களை வெளியேற்றக் கூடாது என்று வலியுறுத்தும் பொதுமக்கள், தங்களுக்கு 2006ம் ஆண்டு வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்,

இந்த பிரச்னையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், விரைவில் 9 ஊராட்சிகளை சேர்ந்த 108 கிராம மக்களும் இணைந்து அடுத்த கட்டமாக கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த இருப்பதாக வனத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையறிந்த தேனி மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி சில தினங்களுக்கு முன் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னன் படுகை, கோரையூத்து, தும்மக்குண்டு, வாலிப்பாறை, நரியூத்து உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டார்.

அவரிடம் மூன்று தலைமுறையாக இப்பகுதியில் வாழும் எங்களின் நிலங்களுக்கும், வீடுகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். இந்த கோரிக்கையை தற்போது அவர்கள் தமிழக அரசிடம் முன்வைத்துள்ளனர். கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.