Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

போடி அருகே இறந்த மீன்களை அகற்றியும் துர்நாற்றம் வீசும் கண்மாய்: விரைந்து தூர்வார கோரிக்கை

போடி, ஆக. 3: போடி அருகே அம்மாபட்டி எல்லையில் மீனாட்சிபுரம் - விசுவாசபுரம் சாலையில் மீனாட்சியம்மன் கண்மாய் அமைந்துள்ளது. இதில் பருவமழைக்காலங்களில் கொட்டகுடி ஆற்றில் வரும் வெள்ளம் ரெட்டை வாய்க்கால் வழியாக திருப்பி விடப்பட்டு இப்பகுதியில் இருக்கும் பங்காருசாமி கண்மாய், மேலசொக்கநாதபுரம் சங்கரப்ப நாயக்கர் கண்மாய், மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய் ஆகியவற்றை நிரப்பும். இதனால் வருடத்தில் 8 மாதங்களுக்கும் மேலாக இக்கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கும். இக்கண்மாய்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கிடையே மீனாசியம்மன் கண்மாயில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மீன்கள் வளர்த்து அவற்றை பிடிக்க ஏலம் விடுவது வழக்கம். அதன்படி தற்போது தேனியைச் சேர்ந்த ஒருவர் கண்மாயில் மீன் ஏலம் எடுத்துள்ளார்.

இந்த கண்மாய்களில் தேங்கும் தண்ணீரால் மேலசொக்கநாதபுரம், மீனாட்சிபுரம், சுந்தர்ராஜபுரம், அம்மாபட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி, விசுவாசபுரம், பத்திரகாளிபுரம், பொட்டல் களம் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் சுமார் 5000 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இவற்றின் உதவியால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்வது, விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. இதற்கிடையில் தற்போது போதிய மழை இல்லாததால் கண்மாயில் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. மேலும் போடியின் சுற்றுப்பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீர், திருமலாபுரம் வழியாக இந்த கண்மாயில் சேர்வதால் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் எதிரொலியாக சமீபத்தில் திடீரென சுமார் ஒரு டன்னுக்கு மேலாக அவற்றில் வளர்க்கப்பட்ட மீன்கள் இறந்து கரையோரம் ஒதுங்கின.

இதன்படி ஏற்கனவே கழிவுநீர் கலக்கும் நிலையில், மீன்களும் இறந்ததால் இப்பகுதியில் தற்போது கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இப்பிரச்னை குறித்து பொதுப்பணித்துறையிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். அவர்கள் தரப்பில் கண்மாயில் இறந்து கிடந்த மீன்கள் மட்டும் அகற்றப்பட்டன. ஆனால் அதிலிருக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவை அகற்றப்படவில்லை.இதனால் இந்த கண்மாயில் இருந்து துர்நாற்றம் வீசுவது தொடர்கதையாகி வருகிறது. தண்ணீரும் கடுமையாக மாசடைந்து காணப்படுகிறது. இதன்படி இறந்த மீன்களை அகற்றிய பின்பு கண்மாயினை அதிகாரிகள் தூர்வாரி இருக்க வேண்டும். ஆனால் அந்த பணிகள் நடைபெறாமல் போனதால், தற்போதும் பொதுமக்கள் அல்லல் படும் நிலை தொடர்கிறது. எனவே கண்மாயில் இருக்கும் அசுத்தங்களை அகற்றுவதுடன், விரைந்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.