Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆண்டிபட்டி அருகே அலுவலக பதிவிற்காக பெயரளவில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டம் கிராம மக்கள் கண்டனம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே அலுவலகத்தின் ஆவண பதிவிற்காக, நேற்றைய உள்ளாட்சிகள் தின கிராம சபைக்கூட்டம் முன்னறிவிப்பு ஏதுமின்றி பெயரளவில் நடத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நேற்று பல்வேறு கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. ஆனால், ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தார்பட்டி ஊராட்சியில், கிராம சபை கூட்டம் முறையான அறிவிப்பு இன்றி, பொதுமக்கள் பங்கேற்பு ஏதுமின்றி, பெயரளவில் நடத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள சித்தார்பட்டி ஊராட்சியில் சித்தார்பட்டி மற்றும் எஸ்.கதிர்நரசிங்காபுரம் ஆகிய கிராமங்கள் அடங்கியுள்ளன. இந்த இரண்டு கிராமங்களிலும் சேர்த்து 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராம மக்களின் வளர்ச்சிப் பணிகளையும் குறைகளையும் தீர்க்கும் மிக முக்கியமான பாலமாக விளங்கும் கிராம சபை கூட்டத்தை, ஊராட்சி நிர்வாகம் முறையாக நடத்தவில்லை என்றும், பொதுமக்களுக்கு எந்தவித முன் அறிவிப்பும் விடுக்கவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வழக்கமாக கிராம சபை கூட்டங்கள் என்பது சமுதாயக் கூடம், நாடக மேடை, கோயில் வளாகம் அல்லது அரசுப் பள்ளி வளாகம் போன்ற பொதுமக்கள் எளிதில் திரளும் பொதுவான இடங்களில் நடத்தப்பட வேண்டும். ஆனால், நேற்று நடைபெற்ற உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டத்தை, பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே பெயரளவிற்கு நடத்தி முடித்துள்ளனர். இதுகுறித்து அனைவருக்கும் தகவல் தெரிவிக்கும் வகையில், ஊராட்சியில் போஸ்டர்கள் கூட ஒட்டப்படவில்லை என, பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கண்துடைப்பு நடவடிக்கை....

சித்தார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பொதுமக்களை அழைக்காமல், அங்கு பணிபுரியும் ஊழியர்களைக் கொண்டும், அவர்களுக்கு மிகவும் பரிச்சியமான ஒரு சில நபர்களை மட்டும் வைத்துக்கொண்டும் கூட்டம் நடைபெற்றதாகப் கண்துடைப்பு நடவடிக்கை ேமற்கொள்ளப்பட்டு இருக்கிறது. பின்னர், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ செயலியில் கூட்டம் நடைபெற்றதாகப் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து கணக்கை முடித்துவிட்டதாகக் தெரிகிறது. இந்த முறைகேடு நேற்று மட்டுமின்றி, கடந்த சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் நடந்த கிராம சபை கூட்டங்களிலும் இதே போன்ற கண்துடைப்பு நாடகங்களே அரங்கேறியதாக கிராம மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக கிராம மக்கள் மேலும் கூறுகையில், ‘கிராம சபை கூட்டங்கள் முறையாக நடத்தப்படாததால், ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் மக்களுக்குத் வெளிப்படையாக தெரிவதில்லை. கிராமத்தின் அடிப்படை வளர்ச்சிப் பணிகளும் முடங்கிக் கிடக்கின்றன’ என்றனர். எனவே, சித்தார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டங்கள் பெயரளவிற்கு நடத்தப்படுவது குறித்து ஆய்வு செய்து, அரசு விதிகளுக்கு முரணாகச் செயல்படும் ஊராட்சி நிர்வாகம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடி விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்தார்பட்டி மற்றும் எஸ்.கதிர்நரசிங்காபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.