Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மேலாளர் அலுவலக வளாகத்தில்; டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தேனி: தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கில் காலி மது பாட்டில்களை நுகர்வோரிடம் இருந்து பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு ரூ.10 வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று நடைமுறைக்கு வரும் என, அமைச்சர் விக்னேஷ் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை மூடிய ஊழியர்கள், தேனி நகர் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர், அலுவலக வளாகத்திற்குள் அவர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டுக்குழு சங்கங்கள் சார்பாக சுந்தரபாண்டியன், எல்பிஎஃப் மாவட்ட செயலாளர் முத்து கணபதி, சிஐடியூ மாரிமுத்து, ஏஐடியூசி மணிகண்டன், அரசு பணியாளர் சங்கம் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அப்போது, காலி மது பாட்டில்களை நுகர்வோரிடம் பெற்று ரூ.10 திரும்ப வழங்கும் முறையை செயல்படுத்தினால் இடப்பிரச்னை ஏற்படுவதுடன் பணிச்சுமை அதிகரிக்கும்.

மேலும் வாடிக்கையாளர்களுடனும் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். ஊழியர்களின் போராட்டம் காரணமாக, நேற்று மாவட்டத்தில் செயல்படும் 70 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. இதனால் மதுப்பிரியர்கள் நேற்று கடும் அவதிக்குள்ளாயினர். தனியார் நடத்தும் மனமகிழ் மன்றங்களில் கூட்டம் அலைமோதியதால், போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை நடைபெற்றது.