தேனி, அக். 2: தேனியில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பாக அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் மற்றும் அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் கூட்டமைப்பு சார்பில், தேனி நகரில் உள்ள நகராட்சி அலுவலம் முன்பாக தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் இப்ராகிம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாநிலத் துணைத் தலைவர் ராமமூர்த்தி, மாவட்டசெயலாளர் சிவமணி, மாவட்ட துணைத் தலைவர் துரைராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
அதில், 2025ம் ஆண்டின் ஓய்வூதிய விதிமுறையை திரும்ப பெற வேண்டும். 8வது மத்திய ஊதியக்குழுவின் நிபந்தனை குறிப்புகளில் ஓய்வூதியத் திட்டத்தை சேர்க்க வேண்டும். இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். 50 சதவீத அகவிலைப்படி மற்றும் நிவாரணத்தை ஊதியம், ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கான சட்டப்பூர்வ தேசிய ஆணையத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


