பேராவூரணி, ஆக.29: பேராவூரணி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தனிநபர் பிரிவில் 8 முதலிடங்களும், 14 இரண்டாம் இடங்களும், 15 மூன்றாம் இடங்களும் பெற்றுள்ளனர். மேலும், குழுப்போட்டிகளில் 5 முதலிடங்களையும், 6 இரண்டாம் இடங்களையும் பெற்று சாதனை படைத்தனர்.
முதலிடம் பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால் இப்பள்ளியில் இருந்து 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சதீஷ்குமார், உதவி தலைமை ஆசிரியர் சுபாஸ்கரன், உடற்கல்வி ஆசிரியர் சோலை மற்றும் குருவிக்கரம்பை, முனுமாக்காடு கிராம மக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.



