தஞ்சாவூர், ஆக.25: தஞ்சையில் மாவட்ட அளவிலான பாரா விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்ட பாரா விளையாட்டு அசோஷியேசன் சார்பில், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை அசோஷியேசன் துணை தலைவர்கள் கண்ணுகினியாள், சங்கரிராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், அசோஷியேசன் தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாற்றுத்திறன் படைத்த மாணவ, மாணவிகள் சுமார் 300 பேர் கலந்து கொண்டு, 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், வட்டு, குண்டு எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகளில் விளையாடினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அசோஷியேசனின் துணைத்தலைவர் முத்துச்செல்வம் ஆகியோர் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கினர். இறுதியாக அசோஷியேசன் செயலாளர் செந்தில் நன்றி தெரிவித்தார்.



