தஞ்சாவூர், ஆக.25: பணியின் போது உயிரிழந்த போலீசார் குடும்பத்துக்கு சக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அவரது குடும்பத்துக்கு ரூ.23.5 லட்சம் நிதியுதவி அளித்தனர்.கடந்த 2009ம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணி நியமனம் பெற்று, பணியில் இருக்கும் போது மறைந்த போலீஸ்காரர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் சக போலீஸ்காரர்கள் மூலம் தொடங்கப்பட்ட போலீஸ்துறை உதவும் அன்பு உள்ளங்கள் குழு வாயிலாக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் பணியில் இருக்கும்போது கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி மரணம் அடைந்தார். எனவே அவரின் குடும்ப நலன் கருதி குழு மூலமாக பெறப்பட்ட மொத்தம் ரூ.23 லட்சத்து 40 ஆயிரத்து 526 நிதியுதவி நடராஜன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை பணியின் போது இறந்த 47 போலீஸ்காரர்கள் குடும்பத்திற்கு நிதி உதவியாக ரூ.11 கோடியே 29 லட்சத்து 10 ஆயிரத்து 263 வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



