பட்டுக்கோட்டை, அக்.24: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அதிராம்பட்டினம் தைக்கால் தெருவில் மழைநீர் தேங்கியிருந்தது. இதனையடுத்து மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளை பட்டுக்கோட்டை தாசில்தார் தர்மேந்திரா, அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையர் சுகேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் தேங்கியிருந்த மழைநீர் முற்றிலுமாக அகற்றப்பட்டது. இதே போல், ராஜாமடம், கீழத்தோட்டம் பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளை பட்டுக்கோட்டை தாசில்தார் தர்மேந்திரா பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை மூலம் மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளில் தூய்மை பணியாளர்களை கொண்டு தண்ணீர் முற்றிலுமாக அகற்றப்பட்டது.


