தஞ்சாவூர், அக்.15: தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே மழை பெய்தது. இதனால் குளிர்ந்த சூழல் நிலவியது. தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடைக்காலத்தை மிஞ்சும் அளவுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. காலை முதலே வெயில் சுட்டெரித்ததால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கினர்.
வெப்பக் காற்று வீசியதால் வாகன ஓட்டிகளும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை தஞ்சை மாவட்டம் முழுவதும் வெயிலின்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்பு நேரம் செல்ல, செல்ல லேசாக மழை பெய்ய தொடங்கியது. தஞ்சை மாநகர பகுதி முழுவதும் மழை பெய்தது. மாநகரப் பகுதி மட்டுமின்றி, புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடுமையான வெப்பம் முழுமையாகத் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.


