பட்டுக்கோட்டை, அக்.14: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாஜ சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழைய பேருந்து நிலைய நகர காவல் நிலையம் அருகில் இருந்து இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி புறப்பட்டது. பேரணியில் பாஜ சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்பட நூற்றுக்கணக்கான பாஜவினர் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்ட பாஜவினர் தங்களது கைகளில் தேசியக் கொடிகளையும், போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். பேரணியானது நகர காவல் நிலையம் அருகிலிருந்து புறப்பட்டு பழனியப்பன் தெரு, மணிக்கூண்டு, பெரியதெரு வழியாக தலைமை தபால் நிலையம் அருகில் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து இரவு நேரத்தில் அனைவரும் செல்போன் டார்ச் லைட்டை அடித்து போதை இல்லாத இளைஞர்கள் சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்றனர்.


