Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தஞ்சை அருகே அடிக்கடி மின்தடை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

வல்லம், செப்.11: தஞ்சாவூர் அருகே வாண்டையார் இருப்பு பகுதியில் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு உருவானது. தஞ்சாவூர் அருகே வாண்டையார் இருப்பு பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் சூரக்கோட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று தகவல் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். வாண்டையார் இருப்பு பொதுமக்கள் மீண்டும் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று தகவல் தெரிவித்த போதும் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றும் இதே போல் மின் தடை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுமார் 100 பேர் நேற்று இரவு 8.30 மணி அளவில் வாண்டையார் இருப்பு பகுதியில் தஞ்சாவூர்-மன்னார்குடி சாலையில் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து தாலுகா போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இனி மின்தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதை எடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.