தஞ்சாவூர், செப்.10: தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து இ.பி.காலனி வழியாக புதிய பஸ் நிலையத்துக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நாஞ்சிக்கோட்டை சாலை, இ.பி காலனி வழியாக புதிய பஸ் நிலையத்துக்கு ஒரு தனியார் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சில் நாஞ்சிக்கோட்டை, இபி காலனி, கல்யாண சுந்தரம் நகர், மின்வாரிய அலுவலகம், தேவர் நகர், கஜலட்சுமி நகர், என்.ஜி.ஓ. நகர், மாதா நகர், காவேரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயணம் செய்து வந்தனர்.
இந்த பஸ் வரவில்லை என்றால் சுமார் 2 கி.மீ தூரம் நடந்து கார்மல் பகுதிக்கு சென்றோ அல்லது நாஞ்சிக்கோட்டை இ.பி.காலனிக்கு வந்தோ பஸ் ஏற வேண்டிய சூழல் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் இந்த பஸ் அடிக்கடி நிறுத்தப்படுவதால், தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து இ.பி.காலனி வழியாக புதிய பஸ் நிலையத்துக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


