ஒரத்தநாடு, அக்.9: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பரிதிகோட்டை கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள கணிப்பொறி அறைக்கு பரிதிகோட்டை கிராம வளர்ச்சி குழு சார்பில் ஏசி வழங்கப்பட்டது. ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி முதல் அரசு மேல்நிலைப்பள்ளி வரை பல்வேறு கிராமத்தில் உள்ளவர்கள்,
தொழிலதிபர்கள் என தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியும் செயல்பட வேண்டும் எனவும், அரசு பள்ளியின் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் தங்கள் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்தவகையில் ஒரத்தநாடு அருகே உள்ள பரிதிகோட்டை அரசு தொடக்கப் பள்ளிக்கு கிராம வளர்ச்சி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக ஏசி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நூலகர் தமிழரசன், பரிதிகோட்டை வளர்ச்சி குழு பழனிவேலு, பன்னீர்செல்வம், திருமுருகன் ஆகியோர் பள்ளியின் தலைமை ஆசிரியர் மல்லிகாவிடம் ஏசியை வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


