பேராவூரணி, அக்.9: பேராவூரணி அருகே மாவடுகுறிச்சி ஊராட்சியில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவுக்கான கலந்தாய்வு கூட்டம் பட்டுக்கோட்டை ஏஎஸ்பி அங்கிதா தலைமையில், பேராவூரணி இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏஎஸ்பி அங்கிதா பேசுகையில்; போலீசார் மட்டுமே சமூக விரோத செயல்களை முற்றிலும் தடுத்துவிட முடியாது. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சமூக விரோத செயல்கள், குற்றங்கள், கள்ளச்சாரயங்கள், போதைப்பொருள் விற்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் அச்சமின்றி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்தப்பகுதிக்கென தனியாக ஒரு காவலரின் டெலிபோன் நம்பர் உங்களுக்கு தரப்படும். இங்கு எந்த பிரச்சனை நடந்தாலும் அவரது எண்ணில் தொடர்பு கொண்டால் உடனடியாக இங்கு போலீசார் வருவார்கள் என்றார். பின்னர், போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மாவடுகுறிச்சி பகுதி தூய்மை பணியாளர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர் மனோஜ், கிராம பிரமுகர்கள் நீலகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


