திருவிடைமருதூர், அக்.8: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா வேப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட வீரமணி நகரில், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூட கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சமுதாயக்கூட கட்டுமான பணிகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அப்போது, பணிகளின் தரம் குறித்தும், கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகளையும், உத்தரவுகளையும் கலெக்டர் வழங்கினார். இந்த ஆய்வின்போது, வேப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் புனிதவதி, இளநிலை பொறியாளர் ரமேஷ், பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


