பள்ளி மாணவன் கால்முறிவு ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: இ.கம்யூ. கட்சி வலியுறுத்தல்
தஞ்சாவூர், பிப்.5: சாலியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவனின் கால் முறிந்து உயிருக்கு போராடும் நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் சாலியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் முகிலன். இவர் கடந்த 28ம் தேதி அன்று பள்ளி வளாகத்திற்கு உள்ளே கால் எலும்பு முறிந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.
இதனையடுத்து, அவரது பெற்றோர் மாணவன் முகிலனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு, கவனக்குறைவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



