தஞ்சாவூர், நவ. 2: தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்படும் 33 பார்களின் உரிமத்திற்கான கால அவகாசம் மேலும் 2 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 4 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 2,700 கடைகள் பார் வசதியுடன் செயல்படுகின்றன. டெண்டர் மூலம் ஒப்பந்தம் பெற்று தனி நபர்கள் இவற்றை நடத்தி வருகின்றனர். கடைசியாக, கடந்த 2023ம் ஆண்டு பார்களுக்கான டெண்டர் விடப்பட்டு, அதன் ஒப்பந்தக்காலம் கடந்த 2025 டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தல் காரணமாக, புதிய டெண்டர் விடப்படாமல், ஒப்பந்தக் காலம் 6 மாதம் ஜூன் 30ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக புதிய டெண்டர்கள் கோர அவகாசம் இல்லாததால், பார்களின் உரிமம் மீண்டும் 2 மாதங்களுக்கு (ஆக. 31ம் தேதி வரை) நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் அக்டோபர் 31ம்தேதி வரை உரிமம் நீட்டிக்கப்பட்டது. மேலும், பார் டெண்டர் விதிகளில் மாற்றங்களை செய்து புதிய டெண்டர் கோரப்பட உள்ளதாகவும், பார்களை நவீன முறையில் மேம்படுத்தி, உணவுப்பொருட்கள் விற்பனையிலும் பல மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போதும் புதிய டெண்டர் அறிவிக்கப்படாத நிலையில், பார்களுக்கான உரிமத்தை டாஸ்மாக் நிர்வாகம் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. அதாவது நவம்பர் 1ம்தேதி முதல் டிசம்பர் 31ம்தேதி வரை இந்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 130 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளுடன் இணைந்து 33 பார் உரிமங்களின் கீழ் நுகர்வோர் அமர்ந்து மதுபானம் அருந்தும் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த பார்கள் தனியார் உரிமம் பெற்று ஒப்பந்த அடிப்படையில் நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


