தஞ்சாவூர், நவ. 8: தஞ்சாவூர் மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்மணிகளில் மழை மற்றும் பனிப்பொழிவால் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதனால் சாலையோரத்தில் குறுவை நெல்மணிகளை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கொள்முதல் நிலையங்களில் உலர்களம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல்சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்து சம்பா சாகுபடி பரப்பளவு குறைந்து காணப்படும். இந்தாண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 3.5 லட்சம் குறுவை சாகுபடி நடந்துள்ளது.
இலக்கை தாண்டி சாகுபடி செய்திருந்தாலும் பூச்சி தாக்குதல் உள்ளிட்டவற்றால் நெற்பயிர்கள் பாதித்தன. இருந்தாலும் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து அதனை அறுவடைக்கு தயார்படுத்தினர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு ள்ளது. இதையடுத்து சம்பா, தாளடி சாகுபடி அதிக அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஒரு சில இடங்களில் சம்பாவுக்கான சாகுபடி பணிக்காக பாய் நாற்றங்கால், நாற்று நடுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் வல்லம், திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், ஒரத்தநாடு, பாபநாசம், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 95 சதவீதம் வரை அறுவடை பணிகள் நடந்துள்ளன. அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதற்காக கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் அறுவ டை செய்த நெல்லை கொள் முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்த மழையால் அறுவடை செய்த நெல்மணி கள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. அவற்றை உலர்த்த கொள்முதல் நிலையங்களில் உலர் களம் இல்லாததால் கிராம புறத்தில் உள்ள சாலைகளில் கொட்டி நெல்மணிகளை காய வைக்கின்றனர். அதே போல் ரா ரா முத்திரகோட்டை சாலியமங்கலம் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்த நெல்களை கொட்டி காயவைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அறுவடை செய்த நெல்மணிகளை காய வைக்க போதிய இடம் இல்லாமல் கொள்முதல் நிலையம் அருகே காயவைக்க வந்துள்ளோம். இது தேசிய நெடுஞ்சாலையாக உள்ளதால் நெல்லை காயவைக்க கூடாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. அடிக்கடி பெய்து வரும் மழையால் நெல்மணிகளில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. குறைந்த நேரம் மட்டுமே காயவைக்க முடிகிறது. பகலில் காயவைத்தாலும் இரவில் பனிப்பொழிவால் மீண்டும் ஈரப்பதம் ஆகிறது. எனவே 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்மணிகளை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் உலர்களம் அமைக்க வேண்டும் என்றனர்.


