உலக இருதய தினத்தையொட்டி சூரியன் எப்எம் சார்பில் `ஹார்ட் ஆப் டெல்டா வாக்கத்தான்’ விழிப்புணர்வு நடைபயணம்
திருச்சி, செப்.29: உலக இருதய தினத்தை முன்னிட்டு சூரியன் எப்எம் 93.5 மற்றும் தஞ்சை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கமலா சுப்பிரமணியம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ‘’ஹார்ட் ஆப் டெல்டா வாக்கத்தான்’’(Heart of Delta Walkathon) குறித்த இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் (27ம் தேதி) பிரம்மாண்டமாக நடந்தது.
5 கி.மீ. தூரம் நடந்த இந்த நடைபயணத்தில் பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியை தஞ்சை மேயர் அஞ்சுகம் பூபதி, மீனாட்சி மருத்துவமனை டாக்டர் கேசவமூர்த்தி, இருதயவியல் துறை தலைவர் முருகேசன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். டெல்டா மாவட்ட மக்களிடையே உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் இதய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.


