தஞ்சாவூர், செப்.29: விவசாயிகளுக்கு அதிகளவில் கடன் வழங்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தஞ்சையை அடுத்த திருமலை சமுத்திரத்தில் செயல்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் கலெக்டர் ரேவதி முன்னிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா நேரில் ஆய்வு செய்து, செயல்பாடுகள், உறுப்பினர் விவரங்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர், திருமலைசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று, மைக்ரோ ஏ.டி.எம் மூலம் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் பணம் எடுக்கும் வசதி, இருப்பு தொகை அறியும் வசதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்பு போன்ற சேவைகளும், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை போன்ற வங்கி சேவைகள் முறையாக வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். மேலும் அவர், விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதிக அளவில் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


