தஞ்சாவூர், செப்.28: தஞ்சாவூர் வண்டிப்பேட்டை பகுதியில் இரும்பு பொருட்கள் அனைத்தும் சாலையிலேயே கடை உரிமையாளர்கள் வைத்துள்ளதால் அந்த பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்தில் சென்று வருகின்றனர். தஞ்சை வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே வண்டிப்பேட்டை பகுதி உள்ளது. இது தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி ஆகும். இங்கு பழைய இரும்பு கடை, வெல்டிங் கடை, பழைய வாகனங்கள் பிரிக்கும் கடை, மரக்கடை, மரப் பொருட்கள் செய்யும் கடை, கருவாட்டு விற்பனை கடை, இரும்பு கேட் செய்யும் கடைகள் என சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் அந்த பகுதியில் குறுகிய அளவில் தான் சாலை உள்ளது. அந்த சாலையில் எதிரே வாகனம் வந்தாலும் ஒரு வாகனம் சென்று பிறகு தான் எதிரே வந்த வாகனம் செல்ல முடியும்.
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கடைகாரர்கள் அனைவரும் அவர்களின் கடை பொருட்களை சாலையிலேயே வைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் மிகவும் சிரமத்தில் சென்று வருகின்றனர். மேலும் அங்கு உள்ள கடைகளுக்கு பொருட்கள் எடுத்து வரும் வாகனங்கள் வந்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பொருட்கள் அனைத்தும் சாலையில் வைக்கப்பட்டுள்ளதால் நேற்று முன்தினம் அந்த வழியாக இறந்தவர் ஒருவர் உடலை எடுத்து செல்ல முடியாமல் மிகவும் சிரமத்தில் எடுத்து சென்றுள்ளனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் கடை வைத்து நடத்துபவர்களிடம் அவர்களது பொருட்களை அவர்களது இடத்தில் வைத்துக் கொள்வதற்கும், சாலையில் செல்பவர்கள் எந்த இடையூறு இல்லாமல் செல்வதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


