தஞ்சாவூர், செப்.28: தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு ஆதார் அடிப்படையில் பணபரிவர்த்தனைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதால் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ரேவதி கேட்டுக்கொண்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறும் பயனாளிகளுக்கு இந்திய அரசின் அறிவுறுத்தலின்படி, செப்டம்பர் மாதம் முதல் ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே. இம்மாதம் முதல் பயனாளிகளுக்கான நிதியுதவி, அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் முறையான நடவடிக்கைகள் மூலம் நிதியுதவி தடையின்றி சென்றடைதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இதுவரை இணைக்கப்படாத பயனாளிகள் தங்களது வங்கியை அணுகி ஆதார் இணைப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டால், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) அலுவலகம் மற்றும் ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் உள்ள தனி வட்டாட்சியர் (ச.பா.தி) அலுவலகங்களில் உள்ள மையங்களை பயனாளிகள் அணுகலாம். அங்கு தேவையான வழிகாட்டுதலும் உதவியும் வழங்கப்படும்.
ஒவ்வொரு பயனாளிக்கும் நிதியுதவி எவ்வித இடையூறும் இன்றி சீராக சென்றடைவதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்


