Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நெல் மூட்டைகள் தேக்கம்: பாதிக்கப்படுவது அதிகாரிகள் அல்ல விவசாயிகள்

தஞ்சாவூர், ஜூன் 26: தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் புகார்களை மனுக்களாக கலெக்டரிடம் வழங்கி பேசினார்கள். விவசாயி செந்தில்குமார்: தஞ்சை மாவட்டத்தில் 251 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேமிப்பு கிடங்குகள் முழுவதும் கடந்த பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இருப்பு உள்ளதால் தற்போது கொள்முதல் செய்யப்படும் நெல்லை இருப்பு வைக்க இடமில்லாமல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் அதிக இருப்பு இருப்பதால் திறந்த வெளியிலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மழையால் பாதிக்கும் நிலையும் எடை இழப்பு ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. உடனடியாக இந்த நெல் மூட்டைகளை அரவைக்கோ அல்லது புதிய சேமிப்பு கிடங்குகளை அமைத்தோ எடுத்து செல்ல போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிபடி விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஜீவகுமார்: இந்த சாகுபடிக்கு தேவையான தடையில்லா மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராயமுண்டான் பட்டி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதாக அறிவிக்கப்பட்டு இதனால் வரை திறக்கப்படாமல் உள்ளது. எனவே விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாய்க்கால்கள் தூர் வாராமல் உள்ளது. எனவே அதனை விரைந்து தூர்வாரி தண்ணீர் தடை இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.கே.ஆர் ரவிச்சந்தர்: மேகதாது அணை கட்டிய தீர்வோம் என கர்நாடக முதல்வரின் அறிவிப்பு ஏற்புடையது அல்ல. தமிழக முதல்வர் சட்டப் போராட்டம் நடத்தி இந்த முயற்சியை முற்றிலும் தடுக்க வேண்டும். தற்போது கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூபாய் 50 அதிகாரிகள் பெற்று வருகிறார்கள். அதனால் மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட்டவர்களை விட மாட்டோம், இதற்கு முன் தொட்டவர்களையும் விட மாட்டோம் என சட்டமன்றத்தில் கூறிய தமிழக முதல்வர் விவசாயி பணத்தையும் தொட மாட்டோம் என கூற வேண்டும்.

தோழகிரிபட்டி கோவிந்தராஜ்: தேர்தலின் போது அளித்த வாக்குறுதிபடி முதல்வர் சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்கடனை முழுமையான தள்ளுபடி செய்ய வேண்டும். பெரிய விவசாயிகளுக்கு 50 சதவீத தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்கு கால நிர்ணயம் என்பது ஏற்புடையதல்ல. ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்தாண்டு தண்ணீர் இல்லாத காரணத்தினால் திறக்க முடியவில்லை இதனால் விவசாயிகளுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.

ஆம்பலாப்பட்டு தங்கவேல்: கல்லணை கால்வாய் பாசன பகுதியின் வடகால் கால்வாயின் பிரிவில் மடைப்பகுதியில் உள்ள மதகு உடைந்து உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும். ஆம்பலாப்பட்டு தொகுதியில் இருந்து ஆலத்தூர் இணைப்புச் சாலை சுமார் 4 கிலோ மீட்டர் தூரமாகும். அந்தப் பகுதியில் பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்தப் பாலத்தின் அருகில் இரண்டு மின் கம்பிகள் அமைந்துள்ளது. பாலம் உயர்வின் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இது குறித்து மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.எஸ்.முகமது இப்ராஹிம்: தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் சொல்லியபடி அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர், நகை கடன்கள் முழுவதையும் பாரபட்சம் இல்லாமல் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேகதாதுவில் அணைக் கட்டிட கர்நாடக அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதற்காக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் விவசாயிகளுக்கு எதிரானது. காவிரி ஆணையத்தின் உத்தரவுபடி கடந்த காலங்களில் தரவேண்டிய தண்ணீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட துணை ஆட்சியர் சௌமியா, வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமி காந்தன், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் தயாள விநாயகர் அமுல்ராஜ், நுகர் பொருள் வாணிப கழக மண்டல முதன்மை மண்டல மேலாளர் செல்வம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.