தஞ்சாவூர், செப். 25: வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கையை மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜெயந்தி கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழை காலங்களில் பொதுமக்கள் மின் விபத்தினை தவிர்த்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும். அதன்படி மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்தால் அதன் அருகில் செல்லாதீர்கள். உடனடியாக அது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு 9280071441, 9280071439 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மின்பெட்டி அருகில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது அதன் அருகில் செல்லக்கூடாது.
மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுக வேண்டும். மின் கம்பிகளுக்கு அருகிலோ, கீழே பணிபுரியும் போது இடைவெளி உள்ளதா? என்பதை அறிந்து விழிப்புணர்வுடன்செயல்படவேண்டும். மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது. மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக்கூடாது. அதன் மீது விளம்பரப்பலகை கட்டக்கூடாது. மேலும் கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும்.


