Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் கிராமபுறங்களுக்கு மினி பஸ் இயக்கம் முற்றிலும் இல்லை

தஞ்சாவூர், ஜூன் 23: சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் கிராம புறங்களுக்கு மினி பஸ் சேவை அறவே இல்லை. 53 மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டும் குக்கிராம பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். தமிழகத்தில் குக்கிராமமக்களும், நகர்ப்புறங்களுக்கு வந்து செல்ல வேண்டும் என்பதற்காக கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சியில் மினி பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கொரோனாவுக்கு பின்னர் மினி பஸ்களை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறி, நாள்தோறும் இயக்கப்படும் நடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பல ஊர்களில் மினி பஸ்கள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் விரிவுபடுத்தப்பட்ட மினி பஸ்கள் திட்டம் என்ற பெயரில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின்படி மினி பஸ்கள் இயக்கம் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு பதிலாக 30 கிலோ மீட்டர் தொலை வுக்கு நீட்டிக்கப்பட்டது. மேலும் எந்த பகுதியிலும் மினி பஸ்களை இயக்கி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, தஞ்சை புறநகர் பகுதியில் உள்ள குக்கிராமங்களுக்கு மினி பஸ்கள் இயக்க 53 பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் குக்கிராமங்களுக்கு மினி பஸ்களை இயக்க அனுமதி வாங்கிக் கொண்டு அந்த மினி பஸ்களை குக்கிராமங்களுக்கு காலை, மாலை என இரு நடைகள் மட்டுமே இயக்கி விட்டு, மீதமுள்ள நடைகளை வருவாய் அதி கம் கிடைக்கக்கூடிய தஞ்சை பழைய பஸ் நிலையம்-புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம்-மருத்துவக்கல்லூரி, பழைய பஸ் நிலையம்-திருவையாறு இடையே மட்டும் இயக்கப்படுகின்றன.

தஞ்சையில் கடந்த ஆண்டு வரை புதிய பஸ் நிலையம், மாரியம்மன்கோவில், நாஞ்சிக்கோட்டை வழித்தடத்தில் 3 பஸ்கள், மருத்துவக்கல்லூரி, கரந்தைக்கு தலா 2 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. தற்போது பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு 25 பஸ்கள், மருத்துவக் கல்லூரிக்கு 10 பஸ்கள், மாரியம்மன்கோவிலுக்கு 12 பஸ்கள், திருவையாறுக்கு 5 பஸ்கள், பூதலூருக்கு ஒரு பஸ் என 53 மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் குக்கிராமங்களுக்கு ஓரிரு நடை மட்டுமே இயக்கப்படுகின்றன. அதன்பிறகு, தஞ்சை பழைய, புதிய பஸ் நிலையம், மருத்துவக்கல்லூரி என நகர்ப்புறங்களில் மட்டுமே இயக்கப்படுகின்றன. மேலும் சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் முற்றிலும் மினி பஸ்கள் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படுவதில்லை. இதனால் கிராமப்புற மக்கள் அவதிகுள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து போக்குவரத்துத்துறை பணியாளர்கள் கூறுகையில், தஞ்சையில் விரிவுபடுத்தப்பட்ட மினி பஸ்கள் திட்டத்தின் கீழ் அனைத்து பகுதிகளுக்கும் புதிதாக எவ்வித வரைமுறைகளும் இல்லாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. மினி பஸ்களுக்கான நேரத்தை முறைப்படுத்தி வட்டார போக்குவரத்து கழக அதிகாரிகள் வழங்காததால் அவை இஷ்டத்துக்கு இயக்கப்படுகின்றன. அனு மதிக்கப்பட்ட வழித்தடத்தை மறுபரிசீலனை செய்து, அரசு, தனியார் பஸ்கள் செல்லாத தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குக்கிராமங்களுக்கு இயக்கப்படாத மினி பஸ்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

இது குறித்து கிராமமக்கள் கூறுகையில், தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து வேங்குராயன்குடிகாட்டிற்கு 2 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு மினி பஸ் கூட வரவில்லை. ஒரு மினி பஸ் மட்டும் காலை, மாலை என 2 தடவை மட்டும் வந்து செல்கிறது. மற்ற நேரங்களில் தஞ்சை நகரப் பகுதிகளுக்குள் ஓட்டுகிறார்கள். இதனால் கிராமமக்கள் அவசரத்திற்கு தஞ்சைக்கு வந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே முன்பு போல் மினி பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.