தஞ்சாவூர், செப்.17: தஞ்சை மாவட்டத்தில் 332 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு போலீசார் பாதுகாப்புடன் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. தஞ்சாவூர் மாநகர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 85 விநாயகர் சிலைகளில் ரயில் நிலையம் பகுதியிலிருந்து விஸ்வரூப விநாயகர் சதுர்த்தி விழாக்குழு சார்பில் 58 சிலைகள் நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வடவாற்றில் கரைக்கப்பட்டது. ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி கடந்த 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் 695 விநாயகர் சிலையும், தஞ்சாவூர் மாநகரில் 85 விநாயகர் சிலைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி தஞ்சை மாநகரத்தில் 85 என மொத்தமாக மாவட்டம் முழுவதும் 695 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் விழா கமிட்டியினர் சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடந்து வந்தது. இந்து முன்னணி உட்பட இந்து அமைப்புகள் சார்பில் ஒரு அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரையில் பல்வேறு உயரங்களில், பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று தஞ்சை நகர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளில் 58 சிலைகள் ரயிலடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வடவாற்றில் கரைக்கப்பட்டது. நீதிமன்ற விதிமுறைகளின் படியும் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைகளின் படியும் ரசாயனம் கலக்காத சிலைகள் மட்டுமே நீர் நிலைகளில் கரைக்கப்பட வேண்டும் என முன்கூட்டியே மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதேபோல் தஞ்சை மாநகர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த மற்ற சிலைகளும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது.
இதே போல், கும்பகோணம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அகில பாரத இந்து ஆன்மீக பேரவை, இந்து மகா சபா, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, கும்பகோணம் மகாமக அன்னதான சேவா சங்கம், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 47 விநாயகர் சிலைகளும், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மகாமககுளம் பகுதியில் ஒரே இடத்தில் கொண்டு வரப்பட்டன.
மேலும், பிற மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்ட வாத்தியங்கள் ஆரவாரத்துடன் இசைக்க ஊர்வலமானது தொடங்கி, மாநகரின் முக்கிய வீதிகளான தஞ்சாவூர் சாலை, பெரிய கடைத்தெரு, மடத்து தெரு வழியாக பாலக்கரை காவிரியாற்றில், அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 332 சிலைகள் கரைக்கப்பட்டன. விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு 1650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


