பேராவூரணி, செப்.17: பேராவூரணி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். பேராவூரணி ஒன்றிய செயலாளர் சித்திரவேல், ஒன்றிய தலைவர் கருப்பையா, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் சண்முகம், ஒன்றிய தலைவர் சுந்தர்ராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பாலசுந்தரம், சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றியச் செயலாளர் வீரமணி, விவசாய சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் நிலவகை மாற்றம் செய்து வீட்டுமனை பட்டா வழங்கி, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மாற்று இடம் வழங்காமல் நீர்நிலைகளில் குடியிருப்போரின் வீடுகளை அகற்றக்கூடாது.
கோயில், மடம் போன்ற இடங்களில் குடியிருப்போர் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களை சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.


