Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கும்பகோணத்திலிருந்து இரவு நேரத்தில் தஞ்சைக்கு வரும் தனியார் பஸ்கள் பைபாஸ் வழியாக இயக்கம்

தஞ்சை, செப்.17: கும்பகோணத்திலிருந்து தஞ்சை வரும் சில தனியார் பேருந்துகள் இரவு நேரத்தில் பைபாஸ் வழியாக இயக்கப்படுவதால் பயணிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தஞ்சைக்கு கும்பகோணத்திலிருந்து தினமும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தனியார் பேருந்துகள் அரசு பேருந்துகளை முந்தி செல்வதற்காக அசுர வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. அரசு பேருந்துகளில் பயணிகள் ஏறுவதற்குள் தங்களது பேருந்தில் பயணிகளை ஏற்றி விட வேண்டும் என ஓட்டுநர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது.

இது ஒருபுறம் இருந்தாலும் விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் செல்வது அல்லது மாற்று பாதையில் இயக்குவது என தனியார் பேருந்துகள் இஷ்டம்போல் இயக்கப்பட்டு வருகிறது. கும்பகோணத்திலிருந்து தஞ்சை நோக்கி வரும் பேருந்துகள் பள்ளியக்ரஹாரம் பேருந்து நிறுத்தத்திற்கு செல்லாமல் பைபாஸ் வழியாக கோடியம்மன் கோயில் குறுக்கு சாலை வழியே செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. கடந்த 12ம் தேதி இரவு 7.45 மணி அளவில் கும்பகோணத்திலிருந்து புறப்பட்ட ஒரு தனியார் பேருந்து பள்ளி அக்ரஹாரம் பேருந்து நிறுத்தத்திற்கு செல்லாது என டிக்கெட் எடுத்த பயணிகளிடம் நடத்துனர் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் ஏன் பள்ளிஅக்ரஹாரம் பேருந்து நிறுத்தத்திற்கு செல்லாது என கேள்வி எழுப்பியும் முறையான பதிலை நடத்துனர் கூறவில்லை.

இதற்கிடையில் வேறு வழி இன்றி இரவு 8:45 மணி அளவில் பள்ளி அக்ரகாரம் பைபாசில் பயணிகள் இறக்கி விடப்பட்டனர். குறிப்பாக பெண் பயணிகள் இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பைபாஸ் சாலையில் இறக்கிவிட பட்டதால் பாதிப்புக்கு உள்ளாகினர். இதுபோல் தினமும் சில தனியார் பேருந்துகள் பைபாஸ் சாலையில் பெண் பயணிகளை இறக்கி விடுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கண்டும் காணாமல் இருப்பது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளியக்ரஹாரம் பைபாஸ் சாலையில் இரவு நேரத்தில் பெண் பயணிகளை இறக்கி விடும் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.