தஞ்சாவூர், செப்.8: விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டைக்காக 3 அடி முதல் 10 அடி வரை உள்ள காகித கூழால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல் அம்மாபேட்டையில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசம் பணி நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா இந்துக்களின் பண்டிகைகளுள் முக்கியமான பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் வருகிறது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி ஆங்காங்கே விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 3வது நாள் அல்லது 5வது நாள் அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத் துச்சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
மேலும், வீடுகளிலும் ஒரு அடி உயர விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து வழிபட்டு விட்டு பின்னர் அவற்றை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயக பெருமானுக்கு விருப்பமான கொழுக் கட்டை, லட்டு, சுண்டல், அவல், பொரி, பழங்கள், அருகம்புல் ஆகியவற்றை படைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 14ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்று அனைத்து விநாயகர் கோவில்கள், சன்னதிகளில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறும். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் விநாயகர் சிலைகளின் விற்பனையும் மும்முரம் அடைந்துள்ளன.
அதன்படி தஞ்சை மாநாகர விஸ்வரூப விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி சார்பில் விழா குழுவினர் 104 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்காக கும்பகோணம், திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் களிமண் மற்றும் பிளாஸ்டாபாரிஸ் மாவு, காகிதக்கூழ் போன்றவற்றால் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. விஸ்வரூப விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் தஞ்சை மகர்நோம்புச்சாவடி சின்ன ஆஸ்பத்திரி விநாயகர் கோவில் அருகே உள்ள இடத்தில் 3 அடி முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த விநாயகர் சிலைகள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனை பக்தர்கள் முன்கூட்டியே ஆர்டர் செய்துள்ளனர். இதனை விநாயகர் சிலை செய்யும் பணியாளர்கள் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.


