Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கார்ப்பரேட்டுகளுக்காக ஏக்கர் கணக்கில் காடுகள் அழிப்பதை கைவிட வேண்டும்

தஞ்சாவூர், செப்.8: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாவட்ட தலைமை அலுவலகத்தில், தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் தலைமையில், மாவட்ட செயலாளர் ஆவணம் ரியாஸ் முன்னிலையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் அடுத்தக்கட்ட மாவட்ட மற்றும் கிளை வளர்ச்சிப்பணிகள் குறித்து பேசப்பட்டது.செப்டம்பர் மாதம் முழுவதும் கிளைகளில் மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டங்கள்,பெண்களுக்கான இஜ்திமா,தர்பியா,மாணவர் மன்றம் மற்றும் போதை ஒழிப்பு பேரணிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் சிறுபான்மை மக்களை நாங்களே பாதுகாத்தோம் என ஒவ்வொரு அரசியல் கட்சியும் சட்டமன்றத்தில் தங்கள் கருத்தை சொல்லி உள்ளனர்.

இட ஓதுக்கீட்டை பெறுவதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முக்கிய பங்காற்றியுள்ளது எனும் கருத்தும் சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நேரத்தில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிப்பதும், இஸ்லாத்திற்கு மதம் மாறும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்படுத்தப்பட்ட மக்களின் பறிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை திரும்ப வழங்குவதுமே உண்மையான சிறுபான்மை பாதுகாப்பாக அமையும். எனவே, தமிழக அரசு இஸ்லாமியர்களின் ஜீவதார கோரிக்கையான 7% இட ஒதுக்கீட்டிற்காக உரிய அரசாணை மற்றும் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு முக்கிய காரணமாக இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகி பலவீனமாக இருந்ததே காரணமாக பார்க்கப்படுகிறது.

சூப்பர் எல்நினோ குறித்த எச்சரிக்கைகள் வந்து கொண்டிருக்கக்கூடிய இந்நேரத்தில் ஆளும் ஒன்றிய அரசு மதவெறியை பரப்புவதற்கு நேரம் செலவிடுவதற்கு பதிலாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பிரச்சாரங்களை பொது மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு நேரம் செலவிட வேண்டும். அந்தமான் போன்ற பகுதிகளில் தங்கள் கார்ப்பரேட் நண்பர்களுக்காக ஏக்கர் கணக்கில் காடுகளை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. இந்தியாவின் கல்வி சார்ந்த புத்தகங்களை வெளியிடக்கூடிய என்சிஇஆர்டி அமைப்பின் சார்பாக வரும் ஆண்டின் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான புத்தகங்கள் தயாரிப்பதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்பை சார்ந்த குறைந்தது 4 பேர் நேரடியாக இடம் பெற்றிருக்கக்கூடிய செய்திகள் வெளி வருகின்றன.

மேலும், இளைஞர்களுக்காக ரீல்ஸ் போட்டு பரப்பக்கூடிய அமைச்சர்கள் அதை விட்டு, விட்டு கல்வி சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கும், அதற்கான நிதிப்பங்கீட்டை அதிகரிப்பதற்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்டப் பொருளாளர் ஜாஃபர் சாதிக், மாவட்ட துணைத் தலைவர் அப்துல்லாஹ் ,மாவட்ட துணைச் செயலாளர்கள் அஷ்ரப் அலி,வல்லம் பாட்ஷா சையது முஸ்தபா மற்றும் மாணவரணிச் செயலாளர் இத்ரீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.