Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தஞ்சை அருகே துணிகரம்: தலைமை ஆசிரியர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு

வல்லம், ஜூலை 8: தஞ்சாவூர் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் இருந்து 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் அருகே ஞானம் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (70). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி மணிமாலா. இவர்களின் மகள் திருமணமாகி சென்னையில் உள்ளார். மகன் லண்டனில் உள்ளார். இதனால் பன்னீர்செல்வம், மணிமாலா இருவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். பன்னீர்செல்வம் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் சரிவர எழுந்து நடமாட முடியாது.

இந்நிலையில் இவர்களின் வீட்டுக்கு நேற்று முன்தினம் (6ம் தேதி) காலை 11 மணிக்கு வந்த மர்ம நபர், பன்னீர்செல்வம், மணிமாலாவிடம் அருகில் உள்ள மனைப்பிரிவை நான் வாங்கி இருக்கிறேன். அதை பார்த்துச் செல்ல வந்தேன். குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். தொடர்ந்து மணிமாலா உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்துள்ளார். பின்னர் அந்த மர்மநபர் மணிமாலாவிடம் நீங்கள் மங்கலகரமாக உள்ளீர்கள். மனைக்கட்டி பிளாட் போடலாம் என்று இருக்கிறேன். இந்த ரூ.5 ஆயிரம் பணத்தை பூஜை செய்து தர முடியுமா என்று கேட்டுள்ளார்.

அந்த மர்ம நபர் பேச்சை கேட்டு மணிமாலாவும் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு பூஜை அறைக்கு சென்றுள்ளார்.

அப்போது பக்கத்து அறையில் பீரோவில் சாவி இருந்ததை சாதகமாகப் பயன்படுத்தி கொண்ட அந்த மர்மநபர் அதிலிருந்த 7 பவுன் நகையை எடுத்துக் கொண்டு மணிமாலாவிடம் தான் கொடுத்த ரூ.5 ஆயிரம் பணத்தையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். சற்று நேரம் கழித்து மணிமாலை பக்கத்து அறைக்கு சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து மணிமாலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.