தஞ்சாவூர், செப்.7: செங்கிப்பட்டி பாசன பகுதி ஏரிகளை நிரப்பிட கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கல்லைணயின் தலைப்பு பகுதியில் அமைந்துள்ள பூதலூர் தாலுகா பகுதி ஒரு வித்தியாசமான புவியியல் அமைப்பை கொண்டுள்ளது. காவிரி, வெண்ணாறு கல்லணை கால்வாய் ஆகிய பிரதான ஆறுகள் பூதலூர் தாலுகா பகுதி வழியாக பாய்ந்து ஓடிக் கொண்டுள்ளன. இருந்த போதிலும் பூதலூர் தாலுகாவின் ஒரு பகுதியான செங்கிப்பட்டி பகுதியில் விவசாய நிலங்கள் இன்னமும் வானம் பார்த்த பூமியாக உள்ளது. இந்தப் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி வயல்கள் அமைந்துள்ளன.
புதிய கட்டளை மேட்டு கால்வாய், உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் ஆகிய இரண்டு கால்வாய்கள் இந்த பகுதியில் அமைந்துள்ளன. தற்போது கடந்த 9 மாதங்களாக மழையும் இல்லை. இதனால் கால்வாயில் தண்ணீரும் வரவில்லை என்பதால் இந்த பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏரிகள் வறண்டு மேய்ச்சல் நிலமாக காட்சியளிக்கின்றன. மேலும் கால்நடைகள் குடிப்பதற்கு கூட எந்த ஏரியிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. நடப்பாண்டில் குறுவை பயிர் சாகுபடி செய்ய இயலாமல் போன நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை கடந்த 1ம்தேதி தமிழக முதலமைச்சர் விஜய் திறந்து விட்டுள்ளார். திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வந்து சேர்ந்து நேற்று கல்லணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்பட்டது.
அதே சமயத்தில் காய்ந்த பகுதி காய்ந்த பகுதியாகவே இருக்கட்டும் என்று எண்ணாமல் கல்லணை திறக்கப்படும் இதே நாளில் கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர் கதவணை பகுதியில் உள்ள தலைமதகை திறந்து புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் வாய்க்கால்களில் தண்ணீர் விட்டு முறைப்படி தஞ்சாவூர் மாவட்ட ஏரிகளில் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கல்லணை திறக்கும் நாள் அன்றே இந்த இரண்டு ஏரிகளில் தண்ணீர் திறக்க வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


