ஒரத்தநாடு பகுதியில் விநாயகர் சிலை அமைப்பாளர்கள் 20 அம்ச வழிமுறை பின்பற்ற வேண்டும்: டிஎஸ்பி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்
ஒரத்தநாடு, செப்.6: ஒரத்தநாடு டிஎஸ்பி காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு டிஎஸ்பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பாப்பாநாடு, திருவோணம், வட்டாத்திகோட்டை ஆகிய காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் வருகிற 14ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் இந்து முன்னணி, பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலையின் உயரம், எந்த பொருளால் தயாரிக்கப்பட்டது, எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்ற விபரம், சிலைகளை தயாரிப்பவர்கள் பெயர் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றின் விவரத்தினை விழா அமைப்பாளர் தெரிவிக்க வேண்டும்.
மேலும் சிலை வைத்து தரிசனம் செய்யும் இடத்தில் சிலை பாதுகாப்பிற்காக தங்களது பொறுப்பில் இருக்கும் தொண்டர்கள் 10 அல்லது 20 நபர்களின் விலாசம் செல்போன் நம்பர்கள் தெரிவிக்க வேண்டும், மேலும் சுழற்சி முறையில் பாதுகாப்பு அமைக்க வேண்டும், சிலைக்கு தகரத்தாலான நிழற்குடை அமைக்க வேண்டும், விநாயகர் சிலை அருகே நீர், மணல் நிரப்பப்பட்ட வாளிகள் தயார் நிலையில் பாதுகாப்பிற்காக அமைத்திட வேண்டும், விநாயகர் சிலைகளை இதற்கு முன்பு ஊர்வலமாக எடுத்துச் சென்ற வழித்தடங்களில் மட்டுமே இவ்வருடமும் அனுமதிக்கப்படும். புதிய வழி படத்தில் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. புதிய சிலைகள் அமைக்கவும் அனுமதி கிடையாது. ஊர்வலம் செல்லும் நேரம் குறிப்பிட்ட மணிக்குள் இருக்க வேண்டும். ஊர்வலத்திற்கு வாகனத்தில் வருபவர்கள் காவல்துறையினர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தில் தங்களது வாகனங்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்,
காவல்துறையினர் அனுமதிக்கும் பாதை வழியாக செல்லவும், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படும் இடங்களில் காவல்துறையினர் உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட இருபது அம்ச கோரிக்கைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப் இன்ஸ்பெக்டர்கள் முகில்ராஜ், செல்லபாண்டி, கணேசன் உள்ளிட்ட போலீசார் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


