Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பட்டுக்கோட்டை-காரைக்குடி வழித்தடத்தில் செப்.9ம் தேதி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்: பொதுமக்கள் ரயில் பாதைகளிலிருந்து விலகி இருக்க எச்சரிக்கை

பேராவூரணி , செப்.7: பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் வழித்தடத்தில் செப்.9 அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் ரயில் பாதைகளை விட்டு விலகியிருப்பதோடு, கால்நடைகளை பாதுகாப்பாக ரயில் வழித்தடப்பகுதிகளுக்கு செல்லாதவாறு வைத்திருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் கடைசி டீசல் இன்ஜின் ரயில் பாதையாக இருந்த பட்டுக்கோட்டை-காரைக்குடி ரயில்பாதை முழுமையாக மின்மயமாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் செப்.9ம் தேதி அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் தலைமையிலான ரயில்வே துறை உயர் அதிகாரிகள் குழு அன்றைய தினம் இந்தப் பாதையை முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர்.

கடந்த செப்.2ஆம் தேதி மின்மயமாக்கப்பட்ட இந்தப் பாதையில் முதல் கட்ட (மின்சார ரயில் இன்ஜின்) சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இவ்வழித்தடத்தில் வருகிற 9ம் தேதி இரண்டாம் கட்ட ஆய்வும், அதிவேக சோதனை ஓட்டமும் நடைபெற உள்ளது. செப்டம்பர் 9ம் தேதி காலையில், முன்புறம் டீசல் இன்ஜினும் பின்புறம் மின்சார இன்ஜினும் பொருத்தப்பட்ட சிறப்பு ஆய்வு ரயிலில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர், உயர் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட மின் பாதைகள், மின்சார உபகரணங்கள், ரயில் நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தபடி பட்டுக்கோட்டைக்கு வருகின்றனர்.

அன்று பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி மாலை 4.20 மணி வரை, பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி வரை மின்சார இன்ஜின் மூலம் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின்போது, பாதையின் பாதுகாப்புத் தன்மை, மின்பாதை அமைப்புகளின் செயல்திறன் மற்றும் ரயிலின் வேகத் திறன் ஆகியவை முழுமையாகப் பரிசோதிக்கப்படும்.

முழு மின்சார ரயில் இயக்கம் எப்போது?

அதிவேக சோதனை ஓட்டத்திற்குப் பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் முறையான ஒப்புதல் பெறப்பட்டு, அதன்பின், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் முழுமையாக மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தின் அனைத்து அகலப்பாதை (பிராட்கேஜ்) வழித்தடங்களும் முழுமையாக மின்மயமாக்கப்பட்ட மாநிலம் என்ற நிலையை தமிழ்நாடு அடைந்துள்ளது.

செப்.9ம் தேதி அன்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் நேரத்தில், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி , கண்டனூர்-புதுவயல், காரைக்குடி வரையிலான ரயில் பாதையின் அருகிலோ அல்லது பாதையைக் கடக்கும் இடங்களிலோ பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் நடமாடக் கூடாது என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. மின் பாதையில் அதிக மின்னழுத்தம் பாய்வதால், பொதுமக்கள் விலகி இருக்குமாறும், ரயில்வே கேட் மற்றும் கடவுப் பாதைகளில் மிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.