Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தெரு வியாபாரிகளுக்கு தீபாவளி தற்காலிக கடை வழங்க வேண்டும்

தஞ்சாவூர், நவ. 3: தீபாவளி பண்டிகையையொட்டி அடையாள அட்டை பெற்ற தெரு வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தற்காலிக கடைகள் வழங்க வேண்டும் என தஞ்சை மாவட்ட தெரு வியாபாரிகள் சங்கம் ஏஐடியூசி சார்பில் கோரிக்கை மனு அளித்தனர். நவம்பர் 8ம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கும்பகோணம் மாநகரில் சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தீபாவளி கடைகளை, தமிழக அரசின் வியாபாரச் சான்று மற்றும் தெரு வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெற்றுள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட தெரு வியாபாரிகள் சங்கம் ஏஐடியூசி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிவகுமார் கூறியிருப்பதாவது:

கும்பகோணம் மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஆயிகுளம் தெற்கு, சோமேஸ்வரன் கோயில் தெற்கு, பொற்றாமரைக் குளம் தெற்கு, டைமண்ட் தியேட்டர் முதல் வெங்கடேஸ்வரா போட்டோ ஸ்டூடியோ வரையிலும், செல்வம் தியேட்டர் முதல் தஞ்சாவூர் செல்லும் பிரதான சாலையின் இருபுறங்களிலும் தற்காலிக தீபாவளி கடைகள் அமைக்கப்படுவது வழக்கமாகும்.

தற்போது மேற்கண்ட பகுதிகளில் தற்காலிக தீபாவளி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பகோணம் மாநகராட்சி மூலம் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டு, தமிழக அரசின் வியாபாரச் சான்று மற்றும் தெரு வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெருவோர விற்பனையை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 2014-ன் அடிப்படையில் அடையாள அட்டை பெற்றுள்ள வியாபாரிகள், சட்டப்படி வியாபாரம் செய்து வருகின்றனர்.எனவே, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளை, சட்டத்தின் அடிப்படையில் அடையாள அட்டை பெற்றுள்ள தெரு வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும். மேலும், தமிழக அரசின் 2015-ம் ஆண்டு தெரு வியாபாரிகள் திட்டம் மற்றும் விதிகளின்படி, தற்காலிக கடைகளுக்கான விற்பனைக் கட்டணத்தை (Vending Fees) நிர்ணயம் செய்து, முறையான ரசீது வழங்கி வசூலிக்க வேண்டும்.தற்காலிக கடைகளை பாதுகாப்பாகவும், ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலும் அமைப்பதற்காக மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்புக் குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளை, அடையாள அட்டை பெற்றுள்ள தெரு வியாபாரிகளுக்கு உடனடியாகப் பிரித்து வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.இதில் எஐடியூசின் மாநிலச் செயலாளர் தில்லைவனம், தெரு வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் மாவட்ட நிர்வாகிகள் காமராஜ், மணிகண்டன், பாலகிருஷ்ணன், சரவணன் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.