Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் பூக்கள் விலை உயர்வு

தஞ்சாவூர், ஆக.3: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகை, கனகாம்பரம் தலா கிலோ ரூ.1000க்கு விற்பனையானது. ஆடி மாதம் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஆடிப்பெருக்கு விழா காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். அதேபோல் கோயில்களில் ஆடிப்பூரம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் ஆடி வெள்ளி அன்று அம்மன்கோயில்களில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள்.

இவ்வாறு ஆடி மாதம் முழுவதும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்கள், விழாக்காலங்களில் பூக்களின் தேவை அதிகம் இருக்கும். அதன்படி இன்று ஆடிப்பெருக்கு விழா என்பதால் வழிபாடு செய்வதற்கு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. தஞ்சையில் உள்ள பூக்காரதெரு பூ மார்க்கெட், தொல்காப்பியர் சதுக்கம் பூ மார்க்கெட் ஆகியவற்றில் நேற்று பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது.

மல்லிகைப்பூ கடந்த வாரங்களில் கிலோ ரூ.300 முதல் ரூ.500-க்கு விற்பனையான நிலையில் நேற்று கிலோ ரூ.750 முதல் ரூ.1000-க்கு விற்கப்பட்டது. கனகாம்பரம் பூவும் பல மடங்கு உயர்ந்து கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சந்தனமுல்லை ரூ.800, முல்லை ரூ.600, அரளி ரூ.500, செவ்வந்தி ரூ.320, சம்பங்கி ரூ.300, ஆப்பிள் ரோஸ் ரூ.250-க்கும் விற்பனையாகின. இந்த பூக்களும் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் நேற்று விலை அதிகமாகும்.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, இன்று ஆடிப்பெருக்கு என்பதால் பூக்களின் தேவை அதிகம். இதனால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூக்களின் வரத்தும் அதிகமாகவே உள்ளது. விலை அதிகம் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர்.