தஞ்சாவூர், நவ. 2: தஞ்சை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற குரூப்-2 தேர்வில் 2694 பேர் ஆப்செண்ட் ஆன நிலையில், 11,375 பேர் தேர்வு எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (குரூப்-2 மற்றும் 2ஏ) முதல்நிலை கொள்குறி வகை தேர்வானது தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை மற்றும் பாபநாசம் ஆகிய தாலுகாக்களில் உள்ள 27 தேர்வு மையங்களில் நடைபெற்றது.இந்த தேர்வு நேற்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 14 ஆயிரத்து 69 தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.
இதில் 11,375 பெயர்கள் தேர்வு எழுதினார்கள். விண்ணப்பித்திருந்த 2694 பேர் தேர்வு எழுத வரவில்லை.இந்த தேர்வுகளின் மூலம், சார் பதிவாளர், உதவிப் பிரிவு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சிறைக்காவல் அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், பல்வேறு அரசுத் துறைகளின் உதவியாளர்கள், தணிக்கை ஆய்வாளர் போன்ற பல்வேறு அரசுப் பதவிகளுக்குத் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு கூடத்திற்கு காலை 8.30 மணிக்கு உரிய அனுமதிச்சீட்டு உடன் வருகை தந்திருந்தனர். தேர்வு எழுத வந்தவர்கள் உரிய சோதனைக்கு பின்பு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 9 மணிக்கு மேல் தேர்வுக்கூடத்திற்கு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தேர்வர்கள் மதியம் 12.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
தேர்வர்கள் தேர்விற்கு கருப்பு பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்தினர். தேர்வர்கள் தங்களுடைய புகைப்பட அடையாள அட்டைகளான ஆதார் அட்டை, கடவுச் சீட்டு, ஓட்டுனர் உரிமம், நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது ஒளி நகலை கொண்டு வந்திருந்தனர். தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன், மின்னணு கைகடிகாரம், புளூடூத் மற்றும் நவீன செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கிய கண்ணாடி போன்ற எந்தவித மின்னணு சாதனங்களையும் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வு எழுதுபவர்கள் செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டிருந்தது. தேர்வினை ஆய்வு செய்ய ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு ஆய்வு அலுவலரும், மேற்பார்வையிட கண்காணிப்பு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் ரேவதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.


