தஞ்சாவூர், அக். 2: தஞ்சாவூர் ரெங்கநாதபுரம் பகுதியில் நிறுத்தப்பட்ட பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகள் மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சாலியமங்களம் நெடுஞ்சாலையில் மெலட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரம் பகுதியில் பயணிகள் நிழற்குடை இருந்தது. இந்த நிழற்குடை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதனால் அந்த பயணிகள் நிழற் குடை இடித்து அகற்றப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் புதிதாக பயணிகள் நிழற் குடை கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது.
இந்நிலையில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது. அந்த பணி நிறுத்தப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் நிழற்குடை பணிகள் தொடங்கவில்லை. இதனால் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் வெயிலில் கால் கடுக்க நிற்கும் அவலநிலை உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் ரெங்கநாதபுரம் பகுதியில் நிறுத்தப்பட்ட பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


