டாஸ்மாக் கடையை துளையிட்டு குவாட்டர் பாட்டில், பணம் திருட்டு
விழுப்புரம், ஜன. 21: விழுப்புரம் அருகே டாஸ்மாக் கடை சுவற்றை துளையிட்டு குவாட்டர் பாட்டில், பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பகுதியில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனிடையே அங்கு செயல்பட்டு வரும் ஒரு டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் ஏழுமலை நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். நேற்று பிற்பகல் கடையை திறக்க வந்தபோது பின்பக்க சுவற்றில் துளையிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கடைக்குள் பார்த்தபோது 15 குவாட்டர் பாட்டில்கள், கல்லா பெட்டியிலிருந்த 10 ரூபாய் காயின் ₹1,000 ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த தாலுகா காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஏழுமலை அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.