Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வருங்காலங்களில் ஏரிகளை சீரமைத்து கூடுதல் தண்ணீரை சேமிக்க வழிவகை செய்ய வேண்டும்

தஞ்சாவூர், ஆக.21: மழை இல்லை, ஆறுகளிலும் தண்ணீர் இல்லை என்ற நிலையில் இனிவருங்காலங்களில் ஏரிகளை சீரமைத்து கூடுதல் தண்ணீரை சேமிக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் உள்பட காவிரி டெல்டா பாசன பகுதிகளில் நடைபெறும் விவசாய பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கால்வாய் பாசனத்தை நம்பி இருந்த விவசாயிகள் வயல்களை தரிசாக விட்டு செய்வதறியாது தவித்து வருகிறார்கள். நில உடைமைதாரர்களின் நிலைமை இப்படி இருக்க வேளாண் தொழிலாளர்களின் நிலைமை நாளுக்கு நாள் கவலைக்குரியதாக மாறிவருகிறது. நாற்று பறித்தல், வரப்பு வெட்டுதல், களை பறித்தல், உரமிடல், பூச்சி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்த தொழிலாளர்கள் வேறு பணிகளுக்கு செல்ல இயலாமல் பரிதவிக்கும் நிலை உள்ளது.மேட்டூர் அணையின் வரலாற்றில் பெரும்பாலான ஆண்டுகள் தாமதமாகத்தான் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முன்பட்ட குறுவை அறுவடைக்கு பின்னர், தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக மீண்டும் நெல் பயிரிட விவசாயிகள் தயக்கம் காட்டி வருகிறார்கள். டெல்டா மாவட்டங்களில் இது போன்ற சூழ்நிலை நிலவி வரும் சூழலில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டி பகுதி முழுமையாக ஏரி பாசனத்தை நம்பியுள்ளது.

இந்த பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி அதன் மூலம் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஒரு போக நெல் சாகுபடி நடைபெறும். திருவெறும்பூர் ஒன்றியம் பொய்கைகுடி ஏரியிலிருந்து புதிய மேட்டுக் கட்டளை கால்வாய்க்கும், வாழவந்தான் கோட்டை ஏரியில் இருந்து உய்யக்குண்டான் நீட்டிப்பு கால் வாய்க்கும் தண்ணீர் விட்டு ஏரிகளை நிரப்ப வேண்டும். தற்போது உள்ள சூழலில் மேட்டூர் அணை திறப்பு குறித்து நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை இல்லாத நிலையில் வடகிழக்கு பருவமழை சாதகமாக இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. இதனால் பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டி பகுதி விவசாயிகள் விவசாய தொழிலாளர்களுக்கான சிறப்பு திட்டம் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், இனி வருங்காலங்களில் மழைநீரை முழுமையாக சேமிக்க ஏதுவாக ஏரி, குளங்களை சீரமைத்து கரைகளை உயர்த்தி கூடுதல் தண்ணீரை சேமிக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது;

செங்கிப்பட்டி பகுதியில் உள்ள ஏரிகள் பலவற்றில் அனுமதி பெற்று மண் எடுப்பதாக கூறப்பட்ட போதிலும், முறையான வகையில், ஏரிகளை சீரமைப்பது போன்ற முறையே இல்லாமல் அதிகளவில் மண் எடுக்கிறார்கள். செங்கிப்பட்டி பகுதி ஏரிகள் திருச்சியை தலைமை இடமாக கொண்ட நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்குள்ள அதிகாரிகள் செங்கிப்பட்டி பகுதி ஏரிகளை தூர்வாருதல், கரைகளை வலுப்படுத்துதல், மதகுகளை சீரமைத்தல் ஆகிய பணிகளுக்கு போதிய கவனம் செலுத்துவதில்லை. எனவே, பூதலூர் ஒன்றிய பகுதியிலுள்ள ஏரிகளை சீரமைப்பது குறித்து தனிக்கவனம் செலுத்தி கூடுதல் நிதி ஒதுக்கி ஏரிகளை சீரமைப்பதுடன், எதிர்வரும் காலங்களில் பெய்யும் மழை நீரை அப்படியே சேமித்து முழுமையாக சாகுபடி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏரிக்கரைகளில் செழித்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.