Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சை அருகே மக்காச்சோளம் அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரம்: உரிய விலை கிடைக்காததால் வேதனை

வல்லம், டிச.20: தஞ்சை அருகே அற்புதாபுரம் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இருப்பினும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையில் அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் பெருகி வரும் இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கான தேவையால் கால்நடை வளர்ப்பை அதிகரித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கோழிப்பண்ணைகளும் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. இதனால் அடர் தீவனங்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. அடர் தீவன உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

இதனால் மக்காச்சோள சாகுபடியை தஞ்சை பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் மேற்கொண்டு வருகின்றனர். முக்கியமாக மானாவரி பகுதியில் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியை மேற்கொள்கின்றனர். காரணம் குறைந்த தண்ணீர், குறைவான பராமரிப்பு என்ற அளவில் மக்காச்சோள சாகுபடி விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒருசில பகுதிகளில் நெல்லுக்கு மாற்றுப்பயிராக மக்காச்சோளம் சாகுபடியும் நடந்து வருகிறது. இதற்காக விற்பனையும் உடனே முடிந்து விடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் தஞ்சை அருகே அற்புதாபுரம் பகுதியில் மக்காச்சோளம் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர். தற்போது சோளக்கதிர்கள் முற்றி அறுவடை முடிந்துள்ளது. வயலில் அறுவடை செய்த சோளத்தை அற்புதாபுரத்தில் சாலையோரத்தில் உலர வைக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அறுவடை செய்த மக்காச்சோளத்தை உலர வைத்தவுடன் நேரடியாக அப்பகுதிக்கே வந்து பிற மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். தற்போது, குவிண்டால் ரூ.2,080 முதல் ரூ.2,150 வரை விற்பனையாகிறது.

சற்று விலை குறைந்திருந்தாலும் காத்திருந்து விற்பனை செய்வதற்கு அவசியமின்றி வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்து உடனடியாக பணத்தை தந்து விடுகின்றனர். இதனால் அறுவடை முடிந்த ஓரிரு நாட்களிலேயே பணம் கிடைத்து விடுவதால் விவசாயிகள் ஓரளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், நிலையான விலை இல்லை இல்லாததால் நெல்லுக்கு கிடைப்பது போல் நிரந்தர விலையை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்று மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.