தஞ்சாவூர், ஆக.20: தஞ்சையில் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ.12க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை குறைவால் பொதுமக்கள் அதனை அதிக அளவில் வாங்கி சென்றனர்
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் பழக்கடைகள் செயல்பட்டு வருகிறது. தஞ்சை மார்க்கெட்டிற்கு கரூர், தூத்துக்குடி, தேனி, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இதே போல் தஞ்சையில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள மொத்த வியாபாரிகளிடமிருந்து சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிக்கொண்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்தது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகம் இருந்தது. ஆனால் தற்போது மழை குறைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து தஞ்சை காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து அதிகம் வர தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
தக்காளி விலை அதிகம் இருந்தால் தஞ்சை மார்க்கெட்டுக்கு 1,300 முதல் 1,500 பெட்டிகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்படும். அதுவே தக்காளி விலை குறைவாக இருந்தால் சமார் 4500 முதல் 5,000 பெட்டிகள் வரை தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். தஞ்சைக்கு தற்போது ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து தக்காளிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யபட்டது. ஆனால் தற்போது தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ.12க்கு விற்பனை செய்யப்படுகிறது.


