தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு; வாங்கிய கடனுக்கு வட்டிதான் கட்ட முடியும்: விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர், ஆக.20: டெல்டா மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறையில் மட்டும் 98 ஆயிரத்து 413 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது, முதலமைச்சர் விஜய், விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுவதும் ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இதையடுத்து ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் விஜய், கடந்த 25-5-2026 அன்று, தமிழகத்தில் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் 2025ம் ஆண்டு மே 1-ம் தேதி முதல் 2026 பிப்ரவரி 28ம் தேதி வரை சிறு, குறு, பெரு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்தது. இதில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் வரை முழுமையாக தள்ளுபடியும், ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் வரை 50 சதவீதம் எனவும், ரூ.1 லட்சத்துக்கு மேல் ரூ.5 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
விவசாயிகளை கடன் தொகையை அளவுகோல் வைத்து பிரிப்பதை கைவிட்டு, பயிர்க்கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதையடுத்து மீண்டும் கடந்த 17-6-2026 அன்று தமிழக முதலமைச்சர் மறுபரிசீலனை செய்து, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்றதில் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாக தள்ளுபடியும், அதற்கு மேல் கடன் தொகையில் ரூ.35 ஆயிரமும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர் போராட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்று, தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியலை கூட்டுறவுத்துறை kooturavu.tn.gov.in < http://kooturavu.tn.gov.in/ > என்ற இணையதளம் மூலம் வெளியிட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 54,882 விவசாயிகளும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 18,312 விவசாயிகளும், நாகை மாவட்டத்தில் 25,219 விவசாயிகளும் என 3 மாவட்டங்களிலும் மொத்தம் 98 ஆயிரத்து 413 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
இது குறித்து முன்னோடி விவசாயிகள் கூறுகையில்; தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் வாங்கிய அனைத்து விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகவும், அதற்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கு 35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி வழங்கியுள்ளது. இதனை மறுபரிசீலனை செய்து முழுமையாக தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம்.ஆனால் விவசாயிகளின் கோரிக்கை ஏற்காமல், பயன் அடைந்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழக அரசின் அறிவிப்பு என்பது வங்கியில் வாங்கிய கடனுக்கு நாங்கள் வட்டி மட்டுமே கட்டும் அளவிற்கு உள்ளது. தற்போது குறுவை சாகுபடி பொய்து விட்டது. சம்பா சாகுபடி செய்யவே முடியாத அளவிற்கு உள்ளது. டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து குறுவை வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். அதை இந்த அரசு செவி சாய்த்து கேட்பது இல்லை. எனவே தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பயிர்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தஞ்சை மாவட்டத்தில் 54,882 விவசாயிகளும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 18,312 விவசாயிகளும், நாகை மாவட்டத்தில் 25,219 விவசாயிகளும் என 3 மாவட்டங்களிலும் மொத்தம் 98 ஆயிரத்து 413 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கை ஏற்காமல், பயன் அடைந்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


