தஞ்சாவூர், ஆக.20: தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டர் ரேவதி முன்னிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) செல்வம் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.தமிழகத்தில் நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு, வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, நகராட்சி. நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாவட்ட நிர்வாகம் கட்டுபாட்டில் உள்ள நீர்நிலைகளில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட பணிகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வு) செல்வம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை. நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை மூலமாகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, இப்பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், பொதுமக்களும் தன்னார்வ அமைப்புகளும் இப்பணியில் ஈடுபட அரசும் நீதிமன்றமும் தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவோணம் ஆகிய இடங்களில் உள்ள வெட்டுவாகோட்டை, வெட்டிக்காடு நர்சரி, நடுவூர், ஒரத்தநாடு புறவழிச்சாலை, ஒரத்தநாடு அண்ணா நகர், சோழன் கரை, கிளாமாங்காடு, சூரப்பள்ளம், மகிழங்கோட்டை போன்ற பல்வேறு இடங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவன், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் நித்யா, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) குணசீலணி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் பாஸ்கரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


