தஞ்சாவூர், ஆக.19: தஞ்சை அடுத்த மேலவெளி லூர்து நகர் 2வது தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாய்க்கால் ஓடுகிறது. இந்த வாய்க்காலுக்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் செல்கிறது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் செல்லும். இந்த வாய்க்காலில் தண்ணீர் செல்லும் போது அந்தப்பகுதியில் விவசாய பாசனத்திற்கு பயன்பட்டு வந்தது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. தற்போது கல்லணை கால்வாயில் தண்ணீர் இல்லாததால் இந்த வாய்க்காலில் தண்ணீர் செல்லவில்லை.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாய்க்காலை தற்போது சிலர் ஆக்கிரமித்து கம்பிவேலி போட்டுள்ளனர். வாய்க்காலே தெரியாத அளவிற்கு கம்பிவேலை போட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். வாய்க்காலை அடைத்தால் அதில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படும். நிலத்தடி நீர் மட்டும் குறையும். எனவே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட வாய்க்காலை மீட்க வேண்டும். இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


