Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக நவீனமயமான பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும்

தஞ்சாவூர், மே 7: தஞ்சை, கும்பகோணம் வழித்தடத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் பயணிகள் அதிக அளவில் பயணித்து வருகிறார்கள். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிய நாளில் முடிந்து விடும். தஞ்சை-சென்னை இடையே இந்த ரயில் பகல் நேர ரயிலாக இயங்குவதால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் சென்னை சென்று வர மிக வசதியாக இருந்து வருகிறது.

அதே போல் டெல்டா மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல ஒரே இரவு நேர தினசரி ரயிலாக இருப்பதால் இந்த ரயிலில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.இந்த ரயில் தற்போது 3 ஏ.சி. பெட்டிகள், 9 படுக்கை வசதி மற்றும் 4 முன்பதிவில்லா பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் என 18 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. மெயின் லைன் பாதையில் இயங்கும் ரயில்களில் பயணிகள் வரவேற்பு கொண்ட ரயில்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்த ரயிலில் தனி முன்பதிவு ஒதுக்கீடு தஞ்சையில் இருந்து கும்பகோணம் வரை நீட்டிக்கப்பட்டதால், இங்கிருந்து தென்மாவட்டம் செல்லும் பயணிகள் வெகுவாக பயன் அடைந்துள்ளனர். இந்த ரயில் நிரந்தர ரயிலாகவும், அதிக பயன்பாட்டை கொண்ட ரயிலாகவும் இருப்பதால் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும், பழைய பெட்டிகளை மாற்றி விட்டு நவீனமயமாக்கப்பட்ட பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று டெல்டா மாவட்ட பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து தஞ்சை மாவட்ட ரயில் பயணிகள் சங்க செயலாளர் கூறியதாவது:- சென்னையுடன் தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய ரயில்களில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒன்று. மெயின் லைன் பாதையில் பயணிகள் வரவேற்பை கொண்ட இந்த ரயிலில் அனைத்து டிக்கெட்டுகளும் விரைவில் விற்று தீர்ந்து விடுகின்றன. முன்பதிவில்லா பெட்டிகளில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது.

ஏற்கனவே தென்மாவட்ட பயணிகள் செந்தூர் ரயிலில் கூடுதல் பெட்டிகள், நவீனமயமாக்கப்பட்ட பெட்டிகள் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் நடை மேடை சிறியதாக உள்ளது. இதனால் கூடுதல் பெட்டிகள் இணைக்க சிரமமாக இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கடந்த ஆண்டு ரயில்வே பொது மேலாளர் செந்தூர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் இதுவரை அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை எல்.எச்.பி. வகை பெட்டிகளுடன் இயக்கும்போது 10 சதவீதம் வரை கூடுதலாக இருக்கைகள் அதிகரிக்கும்.

இதனால் பயணிகள் ஓரளவு பயனடைவார்கள். சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் ஒரே நேரடி ரயில் என்பதால் இந்த ரெயிலில் எப்போதும் கூட்ட நெரிசல் இருக்கத்தான் செய்கிறது. பயணிகள் வசதி கருதி மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம், பாபநாசம், தஞ்சை, திருச்சி வழியாக கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும். மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட சென்னை - தூத்துக்குடி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.