இலாடபுரம் அரசு ஆதிதிராவிடர் பள்ளி ஆண்டுவிழா விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவுரவிப்பு
பெரம்பலூர், மார்ச் 5: இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது. தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறையின் மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன் பங்கேற்றார். பெரம்பலூர் மாவட்டம், இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் மாயக் கிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னதாக உதவித் தலைமை ஆசிரியர் செல்வராணி வரவேற்றார்.
பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் இந்திராணி முன்னிலை வகித்தார். விழாவில் தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறையின் மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன் கலந்துகொண்டார், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கி பாராட்டி சிறப்புரையாற்றினார். பட்டதாரி ஆசிரியர்கள் சின்னசாமி, சிலம்பரசி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நீலமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி அடங்கிய இலக்கியபோட்டிகள், அறிவியல் கண்காட்சி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது. நூறு திருக்குறள் ஒப்பித்த 9ம் வகுப்பு மாணவி வனஜாவுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.
2024 மார்ச்சில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு கேடயம் வழங்கி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நாடகம், ஊமை நாடகம், பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. முடிவில் பட்ட தாரி ஆசிரியர் பாலச் சந்திரன் நன்றி கூறினார்.