சிவகிரியில் சிறப்பு மருத்துவ முகாம்
ஈரோடு, டிச. 2: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டாரம் கணபதிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், சிவகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு, காசநோய் ஒழிப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட சுகாதார நலக்கல்வியாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மருத்துவ அலுலவர்களான டாக்டர்கள் வெங்கடேஷ் பிரபு, சீனிவாசன், கண்மணி, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் பாலகுமார்,சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மழைக்கால நோய்கள் அதன் பாதுகாப்பு வழிமுறைகள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம்,பாதுகாப்பற்ற குடிநீரால் பரவும் நோய்கள்,எலிகாய்ச்சல் அதன் தடுப்பு வழிமுறைகள்,டெங்கு காய்ச்சல் பரவும் விதம்,கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள்,காய்ச்சலுக்கு சுய மருத்துவம் தவிர்த்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதன் அவசியம்,காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள்,காசநோய்க்கான பரிசோதனை,நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தின் பயன்கள் போன்றவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த இரண்டு முகாம்களில் கலந்து கொண்ட 140 பேருக்கு நடமாடும் எக்ஸ்ரே வாகன குழு மூலமாக மார்பக நுண்கதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுகாதார மேற்பார்வையாளர் தோமதாஸ், சுகாதார ஆய்வாளர்கள் ஜெகதீஷ், ஜெய்சிங், மயில்சாமி, ஆய்வக நுட்புனர்கள் தனலட்சுமி, மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.