திருவாடானை, அக்.30: திருவாடானை அருகே மின்வாரியத்தின் அலட்சியத்தால், வயல்வெளியில் தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி சிறுவன் உட்பட இருவர் படுகாயம் அடைந்தனர். திருவாடானை அருகே பரமணிவயல் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் கவிபிரியன் (15). பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சிறுவன் கவிபிரியன், மணலூர் பகுதிக்கு சென்று அங்குள்ள கடை ஒன்றில் வீட்டிற்கு சென்று விட்டு திரும்ப வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது அந்த சிறுவன் மணலூர் ரைஸ்மில் அருகில் உள்ள வயல்வெளி பாதையில் நடந்து சென்றபோது, அப்பகுதியில் தாழ்வாக சென்று கொண்டிருந்த மின்கம்பி திடீரென எதிர்பாராதவிதமாக அவரது தலையின் மீது உரசியதில் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்து உயிருக்குப் போராடியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியாக வந்த பாகனூரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் செல்வராஜ் (48) என்பவர், சிறுவன் கவிப்பிரியனை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக செல்வராஜ் மீதும் மின்சாரம் தாக்கியதில் அவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வயல்வெளியில் நடந்து சென்றபோது தாழ்வாக சென்ற மின்கம்பி தலையில் பட்டு சிறுவன் உட்பட 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


